Welcome to V Tamil News ..... VTamilNews.com என்பது பொதுமக்களுக்கு உள்ளூர் முதல் உலக செய்திகள் மற்றும் விளையாட்டு, வர்த்தகம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.
spot_img

தமிழ்நாடு சந்தித்த இடைத்தேர்தல்கள்… இந்த சம்பவங்கள் எல்லாம் தெரியுமா?

Published :

தமிழக அரசியல் களத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரபரப்பான விவாதப் பொருளாகியிருக்கிறது. வழக்கமான தேர்தல்கள் போல இல்லாம இடைத்தேர்தல்கள் எப்பவுமே ஸ்பெஷல்தான்… இடைத்தேர்தல்கள் என்று சொன்னாலே குறிப்பிட்ட தொகுதி மக்கள் பரபரப்பாகிடுவாங்க. அப்படி இதுக்கு முன்னாடி தமிழ்நாட்டுல நடந்த இடைத்தேர்தல பத்தியும், அதுல நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள பத்தியும்தான் இந்த பதிவுல நாம பார்க்கப்போறோம்… வாங்க தெரிஞ்சுக்கலாம்.

By elections in Tamil Nadu

By elections in Tamil Nadu
By elections in Tamil Nadu

இடைத்தேர்தல்

எம்.எல்.ஏ அல்லது எம்.பி இவர்கள் யாராவது உயிரிழந்துவிட்டால், அந்தத் தொகுதியைக் காலியானதாகத் தேர்தல் ஆணையம் முதலில் அறிவிக்கும். அதுக்கப்புறம், அவங்க இறந்து 6 மாதத்துக்குள் குறிப்பிட்ட தொகுதியில் தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரைத் தேர்வு செய்வாங்க. அப்படி புதிய உறுப்பினரைத் தேர்வு செய்வதற்கு நடத்தப்படுறதுதான் இடைத்தேர்தல். பெரும்பாலான இடைத்தேர்தல்கள்ல ஆளுங்கட்சிகள் வெற்றி பெற்றதைத்தான் வரலாறு சொல்லுது. ரொம்பவே அரிதா எதிர்க்கட்சிகளும் வெற்றி அடைஞ்சிருக்காங்க. அந்த சம்பவங்களை தான் பார்க்கப்போறோம்.

காங்கிரஸை ஓரங்கட்டிய 2 இடைத்தேர்தல்கள்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த 1957, 1962 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியமைத்திருந்தது. காங்கிரஸ் தமிழகத்தில் வலுவாக இருந்த காலகட்டத்தில் 1962-ல் திருச்செங்கோடு M P தொகுதி, 1963-ல் திருவண்ணாமலை M L A தொகுதிக்கும் நடந்த இடைத்தேர்தல்கள் வரலாற்றை மாற்றி எழுதியது என்றே சொல்ல வேண்டும்.

திருச்செங்கோடு M P தொகுதி இடைத்தேர்தல்

1962 தேர்தலில் திருச்செங்கோடு மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற சுப்பராயம், மகாராஷ்டிர மாநில ஆளுநரானார். சில மாதங்களிலேயே அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் செங்கோடக் கவுண்டரும் மற்றும் திமுக சார்பில் செ.கந்தப்பனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

ஆளுங்கட்சியான காங்கிரஸுக்கு பிரஜா சோசலிஸ்ட் கட்சி, சோசலிசக் கட்சி, ஜனசங்கம், தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் மா.பொ.சியின் தமிழரசுக் கழகம் ஆகிய கட்சிகள் ஆதரித்தன. அத்தோடு ஆளுங்கட்சியின் அதிகார பலம், பணபலம் முக்கியமான பங்காற்றியது. மறுபக்கம் திமுகவை ராஜாஜியின் சுதந்திரா கட்சி மட்டும் தான் ஆதரித்தது. கடும் போட்டி உண்டான இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் செ.கந்தப்பன் ஜெயித்து புதிய வரலாறு படைத்தார். தமிழகத்தில் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் வெற்றி பெற்ற வரலாறு அதுதான் முதல்முறை.

திருவண்ணாமலை இடைத்தேர்தல்

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான முதல் விதை போட்ட தேர்தல் என்றே இந்த இடைத்தேர்தலை கூறலாம். திருவண்ணாமலை தொகுதியில் 1962-ல் வென்ற காங்கிரஸ்சட்டமன்ற உறுப்பினர் பழனிபிள்ளை 1963-ல் உயிரிழந்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் திமுகவின் சார்பில் ப.உ.சண்முகம் போட்டியிட்டார். இவர் ஏற்கனவே 1957 ல் சுயேச்சை வேட்பாளராக திருவண்ணாமலையில் போட்டியிட்டவர்.

அத்தோடு 1962 தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி கண்டவர். அவருக்கே மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பு அளித்தது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் பத்ராசலம் நிறுத்தப்பட்டார். திமுக வளர்ச்சியைக் கண்ட முதல்வர் காமராஜர், அமைச்சர்களுடன் திருவண்ணாமலையிலேயே முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் . அனைவருக்கும் இலவசக் கல்வி, சீருடை, சத்துணவு… இதுமட்டுமின்றி, மதுரைக்கு அறிவித்த கூட்டுக் குடிநீர் திட்டத்தை விட கூடுதலான பொருட்செலவில் ரூ.48 லட்ச ரூபாயில் திருவண்ணாமலைக்குக் குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை முதல்வர் காமராஜர் அளித்தார்.

மறுபக்கம்
திமுக, வடக்கு வாழ்கிறது;
தெற்கு தேய்கிறது,
காகிதப்பூ மணக்காது,
காங்கிரஸின் சமதர்மம் இனிக்காது.

மத்திய அரசு இந்தியைத் திணிக்கிறது, மெல்லத் தமிழ் இனி சாகும்’ உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்தது. திமுக வேட்பாளர் ப.உ.சண்முகம், 38,666 வாக்குகளை பெற்று வெற்றி அடைந்தார். இந்த வெற்றியை பொதுக்கூட்ட மேடைகளில் முழக்க மிட்டனர் திமுக தலைவர்கள். திமுகவின் வெற்றி தேசிய அளவில் எதிரொலித்தது. இதையடுத்தே, 1967 தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்முறையாக தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் ஏறியது.

See also  ராஜபாளையத்தில் உள்ள அய்யனார் கோவில் அருவி..

திருப்பம் கொடுத்த தென்காசி

திமுக ஆட்சிக்கு வந்தபின் தமிழகம் சந்தித்த முதல் இடைத்தேர்தல் தென்காசி தொகுதி இடைத்தேர்தல்தான். 1967 தேர்தலில் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ சிதம்பரம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு 1968-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி மற்றும் 8 அமைச்சர்கள் தென்காசியில் முகாமிட்டு திமுகவுக்காகத் தேர்தல் பணி செய்தனர்.

திமுக சார்பாக சம்சுதீன் என்கிற கா.மு.கதிரவன் களமிறக்கப்பட்டார். முதலமைச்சர் அண்ணா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும் போது, “ஒரு விருந்தில் இலை விரித்து அறுசுவை பண்டங்களையும் வைத்திருப்பதுபோல், தமிழக மக்கள் திமுகவுக்கு ஆட்சி என்னும் விருந்தை கொடுத்திருக்கிறீர்கள். அதில் இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது ஊறுகாய் போன்றது. அறுசுவை விருந்தில் ஊறுகாய் இல்லை என்றால் எப்படி இருக்கும்?” என்று பேசினார்.

திமுக உறுப்பினராக இருந்த எம்.ஜி.ஆர், அப்போது எடுத்த புதிய பூமி திரைப்படத்தில் கதிரவன் என்கிற பாத்திரத்தை ஏற்று நடித்தார். தென்காசி வேட்பாளருக்கு ஆதரவு சொல்லும் வகையில் இப்படியும் ஒரு பிரசாரத்தை திமுக முன்னெடுத்தது. காங்கிரஸ் இடமிருந்த அந்தத் தொகுதியை திமுக கைப்பற்றியது.

காமராஜரின் எளிமையை உணர்த்திய குடியாத்தம்

காமராஜர் ஆட்சிக்கு வந்தபோது குடியாத்தம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. காமராஜர் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக வேலூருக்கு தனியாளாக திறந்த ஜீப்பில் ஏறி சென்றார். குடியாத்தம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக வி.கே.கோதண்டராமன் என்பவர் காமராஜரை எதிர்த்துபோட்டியிட்டார். தான் போட்டி இடுகிற குடியாத்தம் தொகுதிக்கு பிரச்சாரத்திற்காக எந்த ஒரு அமைச்சரும், அதிகாரிகளும் வர வேண்டாம் என்றார்.

பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் தந்தபோது, நான் முதலமைச்சராக வரவில்லை. இங்கு கோரிக்கை மனுக்களை வாங்குவது சரியாக இருக்காது. எதிர்க்கட்சி வேட்பாளர் வரும் போது, அவரிடம் இப்படி கோரிக்கை மனுக்களை கொடுப்பீங்களா என்று கேட்டார். காலை ஆறு மணி முதல் நள்ளிரவு வரை வாக்கு சேகரித்துவிட்டு, எந்த ஊரில் இருக்கிறாரோ அங்கு இருக்கும் காங்கிரஸ் தொண்டர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்கியிருக்கிறார் காமராஜர்.

என்னை எதிர்த்து நிற்கும் கம்யூனிஸ்ட் வேட்பாளரும் அப்பழுக்கற்றவர். அவரும் மக்களை நேசிப்பவர். என்னையும் உங்களுக்குத் தெரியும். எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்து வாக்களியுங்கள்’ என்று பெருந்தன்மையோடு பல பகுதிகளில் குறிப்பிட்டார் காமராஜர். அந்த இடைத்தேர்தலில் காமராஜருக்கு மக்கள் பெருவாரியான வெற்றியை அளித்தனர்.

2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் எட்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடந்தன. இதில், மங்களூர் தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக வெற்றிபெற்றது. ஆளுங்கட்சியான அதிமுக மற்ற தேர்தல்களில் வெற்றிபெற்றது. அதேபோல், 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் திருமங்கலம் உள்ளிட்ட 11 தொகுதிகளுக்கான இடத்தேர்தல்கள் நடந்தன. இந்த 11 தேர்தல்களிலும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிகளே வெற்றிபெற்றன.

See also  ராஜபாளையத்தில் உள்ள அய்யனார் கோவில் அருவி..

திருமங்கலம் ஃபார்முலா

தமிழகம், ஏன் இந்தியா முழுமைக்கும் சிறப்பு வாய்ந்த இடைத்தேர்தல் என்றால் அது 2009-ம்வருடம் நடந்த திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல்தான் என்று சொல்ல வேண்டும். இதற்கான காரணம், வாக்காளர்கள் தெரு வாரியாகக் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வெகுவாக கொடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுதான். அதிமுக கூட்டணியில் களமிறங்கி திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்ற வீரஇளவரசன் மறைவுக்குப் பிறகு 2009-ல் திருமங்கலம் தொகுதிக்காக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அப்போது திமுக ஆட்சியில் இருந்த போது, அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி தலைமையில் திமுக தேர்தலை சந்தித்தது. ஏற்கனவே நடந்த மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கும் மதுரை மேற்கு தொகுதி தேர்தலில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் வெற்றி பெற்றதற்கும் மு.க.அழகிரி உதவியிருந்ததால், எதிர்பார்ப்பு கூடுதலானது. மதுரை சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் ஆளுங்கட்சியான திமுக மீது அதிருப்தி உண்டான சூழல் அது. அப்படியான சூழ்நிலையில் திமுகவின் வெற்றிக்கு அழகிரி பல்வேறு வியூகங்களை வகுத்தார்.

தொகுதி வாக்காளர்கள் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கை முறையாக கணக்கீடு செய்து அவர்களுள் எக்கட்சியிலும் இல்லாத குடும்பங்களை குறிவைத்து பண வினியோகம் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் புகார் சொன்னது. மேலும் வெளியூர்களுக்கு சென்றிருந்தவர்களின் வீடுகளில் கதவு மற்றும் ஜன்னல் இடுக்குகள் வழியாக பணப் பட்டுவாடா நடைபெற்றதாகவும் செய்தித்தாள்கள் மற்றும் வாக்காளர் சீட்டு இவைகளில் 5,000 முதல் 6,000 ரூபாய் வரை மறைத்து விநியோகம் செய்யப்பட்டதாகவும் தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்தன. வெளியூரில் வசிப்போரை அழைத்து வந்து, அவர்கள் வாக்களித்ததும் பணம், பிரியாணி ஆகியவற்றை கொடுத்து மீண்டும் அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எதிர்பார்த்தது போலவே திமுக வேட்பாளர் லதா அதியமான், 79,422 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம், சுமார் 40 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தார். இந்தத் தேர்தலில் ச.ம.க சார்பில் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகியோர் வாக்கு சேகரித்தும், அந்த வேட்பாளரால் 831 வாக்குகள் தான் பெற முடிந்தது. இருப்பினும் பண பட்டுவாடா செய்ததை பற்றி எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்க முடியாததால், தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்யவோ அல்லது குற்றவியல் நடவடிக்கையோ இல்லை. அதேசமயம், பணம் புழங்கியது காரணமாகவே இது மோசமான முன் உதாரணமாக அமைந்து, இன்றுவரையில் திருமங்கலம் ஃபார்முலா என்ற சொல்லாடல் அரசியல் களத்தில் நிலைத்துவிட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

திருமங்கலம் இடைத்தேர்தலைப் போன்றே, தமிழக அரசியல் வரலாற்றில் இன்னொரு முக்கியம் கொண்ட இடைத்தேர்தல் என்று சொன்னால், அது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்தான். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த 2016-ல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு காலமானார். அதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவில் பிளவு உண்டானது. டிடிவி தினகரன் தனியாகக் களம் கண்டார். அவர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் வேட்பாளராக அக்கட்சியின் அவைத்தலைவரான மதுசூதனன் நிறுத்தப்பட்டார்.

See also  ராஜபாளையத்தில் உள்ள அய்யனார் கோவில் அருவி..

இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான திமுக சார்பில் வேட்பாளராக மருது கணேஷ் களமிறக்கப்பட்டார். முதலமைச்சர், அமைச்சர்கள் என அரசு இயந்திரமே ஆர்.கே.நகரில் முகாமிட்டு வாக்கு சேகரித்தது. ஜெயலலிதா வெற்றிபெற்ற தொகுதி என்பதால், தமிழக அரசியல் முழுவதும் ஆர்.கே.நகர் பிரசாரத்தையும் முடிவையும் எதிர்பார்த்து இருந்தது. ஒரு கட்டத்தில் ஜெயலலிதா உயிரற்ற உடல் போன்ற வடிவ பொம்மையை வைத்தும் வாக்கு சேகரித்த நிகழ்வு பரபரப்பை உண்டாக்கியது.

2016 ஆம் ஆண்டு தேர்தலின்போது ஆர்.கே.நகரில் ஜெயலலிதா, 39,544 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எல்லோரையும் புருவம் உயர்த்தச் செய்தார்.

இந்தத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு ரூ.20 விநியோகம் செய்து, வெற்றிபெற்ற பிறகு அந்த ரூபாய் நோட்டைக் கொடுத்தால் பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படும் என்று கூறி டிடிவி தினகரன் வாக்குறுதி கொடுத்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வெற்றி மூலம் 2004-க்குப் பிறகு முதல்முறையாக இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர் என்கிற பெருமை பெற்றார் தினகரன்.

தமிழகம் எத்தனையோ இடைத்தேர்தல்களை சந்தித்துள்ளது. நேரம் கருதி அதில், குறிப்பிட்ட சில இடைத்தேர்தல்களை பற்றி மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளோம். அப்படி இடைத்தேர்தல் சம்பவம் வேற எதாவது உங்களுக்குத் தெரியும் என்றால் மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

RELATED ARTICLES

சமீபத்திய செய்திகள்